தமிழ் திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40,000 பாடல்களுக்கும் மேலான பாடல்களைப் பாடி, ரசிகர்கள் வாழ்வோடு கலந்திருந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசைஞானி இளையராஜா இசையில், இவர் பாடிய பாடல்கள் அனைத்தும், பாலை வனத்தில் கண்டெடுத்த தேனூற்று போல அத்தனை இனிமையானது. சுகம், துக்கம், மகிழ்ச்சி, தோல்வி, வலி, வேதனை என சாமனிய மனிதனின் குரலாய் வெளியில் ஒலித்தவர். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று முன் தினம் மீண்டும் எஸ்.பி.பி-யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பிணும், சிகிச்சை பலனின்றி நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இதனால் பிரபலங்களும், ரசிகர்களும் பெருஞ்சோகத்தில் ஆழ்ந்தனர். பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.