புத்தகங்கள் மானுடத்தை
வழிநடத்தும் தத்துவங்கள்
பூத்துக் குலுங்கிடாமல்
மனிதனோ முடங்கிப்போனான்.
ஆயகலைகள் பயின்று
வித்தகன் ஆனபோதும்
தாயெனும் புத்தகத்தை
படிக்கவே மறந்துபோனான்.
உந்தியதோர் உலகவியல்
ஆயிரமாய் அறிந்தபோதும்
தந்தையெனும் புத்தகத்தை
திறக்கவே தவறிப்போனான்.
ஆசான் அறிவுறுத்திய
நல்லவைகள் நாடாமல்
நேசமெனும் மனிதநேயம்
நெஞ்சகத்தில் அற்றுப்போனான்.
மண்ணில் மகத்துவம்புரிந்து
விண்ணில் விந்தைகள்செய்தும்
பெண்ணெனும் புத்தகமோ
புரியாமலே குழம்பிப்போனான்.
பிறந்த மழலைகளாம்
புதுப்பொலிவுப் புத்தகத்தை
திறந்து பார்க்காமலே
தரம்குறைய வைத்துவிட்டான்.
வல்லவனாய் உலகில்
எல்லாம் அறிந்திருந்தும்
பல்சுவைப் பக்கங்களாம்
உறவுகளை இழந்துவிட்டான்.
நட்பெனும் புத்தகத்தை
நாடி நவின்றிடாமல்
நுட்பங்களை வாழ்வில்
கடைப்பிடிக்கத் தவறிவிட்டான்.
முதுமையெனும் வாழ்வின்
இறுதி விளிம்பினிலும்
எதையுமே படிக்காமல்
அமைதியையும் இழந்துவிட்டான்.
எந்தப் புத்தகத்தையும்
வாழ்நாளில் படிக்காமல்
அந்தகத்தை வரவேற்று
வாழ்க்கையையே தொலைத்துவிட்டான்.
இனிய நினைவுகள்
கனிந்த வாழ்வினில்
இன்பங்களைத் துறந்து
துன்பங்களில் மூழ்கிப்போனான்.
புத்தகங்கள் கூறும்
வாழ்வியலைப் படிக்காமல்
மொத்தமாய் சூனியத்தில்
காணாமலே கரைந்துபோனான்.
கவிஞர் இரா சண்முகம்
பரணம்பேடு.
