
(அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வில்லங்கக் கவிதை அல்ல இது.
அரசு நன்கமைந்து சிறந்தோங்க வேண்டுமென்ற ஓர் சராசரி இந்தியனின் ஆதங்கக் கவிதை.)
எதுகை மோனையென்று
வரிவடிவம் தழைத்து
ததும்புகின்ற தேன்மலராய்
வண்ணங்கள் பூத்து
புதுவசந்தம் கொஞ்சும்
கவிதைப் பொலிவோடு
ஓதுகின்ற சூழலிலும்
தலைப்பினைத் தேடுகிறேன்.
குமரிமுதல் இமயம்வரை
இருபத்தெட்டு மாநிலங்கள்
எட்டுயூனியன் பிரதேசங்கள்
விமரிசையாய் அமைந்து
இந்தியத் திருநாடாய்
நாம்உரைந்த போதினிலும்
நிரந்தர நிம்மதியாய்
அமைதியை நிலைநாட்டும்
தலைமையைத் தேடுகிறேன்.
தலைப்பில்லாக் கவிதை
தரமற்றுப் போவதுபோல்
தலைமை சரியின்றி
தத்தளிக்கும் எந்நாடும்
நிலைகுலைந்த எந்திரமாய்
பயனற்றுப் பழுதாகி
தொலைந்த வசந்தங்களால்
தோல்வியிலேத் துவண்டுபோகும்.
இந்தியத் திருநாடு
நம்தாய்த் திருநாடு
சிந்திய இரத்தங்களால்
சுதந்திரம் அடைந்தநாடு.
இன்றுஅதர்மங்களின் ஆளுகையில்
நன்நிலைத் தடுமாறி
இன்ப சுதந்திரத்தை
இழந்து நிற்கும்நாடு.
தீவிரவாதம் எனும்
பேரழிவுப் பெரும்போரில்
கவிழ்ந்த கப்பல்களாய்
வடக்கு மாநிலங்கள்.
நதிநீர்ப் பங்கீட்டின்
அடாவடி அரசியலில்
நீதியையும் புறக்கணிக்கும்
தெற்கு மாநிலங்கள்.
தடுப்பணைகள் கட்டி
உயிர்நீர் மறுப்பதனால்
வாடுகின்ற பயிருக்கு
விடைதேடும் தமிழகம்.
தென்மேற்குப் பருவத்தில்
இயற்கைப் பேரிடராம்
துன்பப் பெரும்பிடியில்
சிக்குகின்ற கேரளம்.
ஆணவப் படுகொலையும்
பெண்ணடிமை வக்கிரமும்
தணலாய்த் தகிக்கின்ற
மணிப்பூர் மாநிலம்.
வன்முறைப் பெரும்பகையும்
இயற்கைப் பேரழிவும்
பன்மடங்காய்ப் பெருகி
அல்லலுறும் இந்தியா.
இலக்கணத்தோடு திகழும்
நல்லதொரு கவிதைக்கு
சொல்லடுக்காய் ஏற்றதொரு
தலைப்பினைத் தேடுதல்போல்
அல்லலுறும் இந்தியா
எல்லையிலா மகிழ்வோடு
எல்லாமுமாய்த திகழ்வதற்கு
தலைமையினைத் தேடுகிறேன்.
மனிதநேயம் கொண்டு
பெண்மையை மதித்து
இனம்மதம் மறந்து
இயற்கை இடரெதிர்த்து
பாரதியின் பெருங்கனவாம்
நதிநீர் இணைப்பதனை
பாரதத்தில் தோற்றுவிக்கும்
தலைமையினைத் தேடுகிறேன்
அழகுதமிழ்க் கவிதைக்கு
அமையும் அருந்தலைப்பாய்
எழுச்சிகொண்ட தலைமையது
இந்தியாவில் முகிழ்த்திடுமா ?

கவிஞர் இரா சண்முகம்
பரணம்பேடு.