பொன்னேரியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.எஸ் கோவிந்தராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், பொன்னேரி நகர செயலாளர் விஸ்வநாதன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் டி.எல்.எஸ். சதாசிவலிங்கம், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உரையாற்றுகையில், “பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியில் இருந்த திமுக மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்பட அனைவரும் எனது வெற்றிக்காக அயராது உழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி என்றால் வாரிசுகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சி என்ற ஒரு முத்திரையை மாற்றி அமைக்கும் வகையில், கடைக்கோடியில் இருக்கும் என்னை பொன்னேரி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் நமது நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார்.
அதேபோல், திமுக மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.எஸ். கோவிந்தராஜன், பகலில் அவருடைய தொகுதியில் பணியாற்றி விட்டு இரவு நேரத்தில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்தும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டும், என்னுடைய வெற்றிக்காக உழைத்தார் என்றார்.