சென்னை
பனை மரத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பனைத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் பனை மரத்தின் மூலம் கிடைக்கும் கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் செய்கிறது. மருந்துகளால் தீராத வியாதிகளும் தீர்கிறது.
இப்படிப்பட்ட கள்ளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி பனை மரத்தொழிலையே நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பேணி காக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. ஆனால் அரசு இதுவரை செவிசாய்க்காமல் உள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று பனை இளவரசி கவிதா காந்தி தலைமையில், கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும், மாநில மரமான பனைமரங்கள் அழிவை தடுக்கவும், பனைத் தொழிலை மேம்படுத்தவும் தமிழக அரசின் கவன ஈர்ப்பு போராட்டம் மற்றும் மாபெரும் பனை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்க தலைவர் ஜி.பி.பச்சையப்பன், கே.வீரகுமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கமிட்டனர்