பாடியநல்லூர் ஊராட்சியில் தீ மிதி திருவிழா குறித்த விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் தீமிதி திருவிழா குறித்து ஆலய நிர்வாகிகளை அழைத்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
பாடியநல்லூர் ஊராட்சியில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பங்குனி, சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தீமிதி திருவிழா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தீமிதி திருவிழாவில் தீமிதிக்கும் பக்தர்களுக்கு ஏதேனும் தீக்காயங்களோ அசம்பாவிதங்களோ ஏற்பட்டால் அதனை திருவிழாவை நடத்தும் நிர்வாகிகளே பொறுப்பேற்றுக் கொண்டு தீமிதிக்கும் பக்தர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். நஷ்டஈடு வழங்க முடியாதவர்கள் திருவிழாவை மட்டும் நடத்திக் கொண்டு தீமிதியை தவிர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத் தீர்ப்பின் படி திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசங்கள் மற்றும் ஆடை குறைப்பு நடனங்கள் இருக்கக்கூடாது என ஆலய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள மேட்டுப்பகுதி, ஆலமரம், பவானி நகர், ஜோதி நகர், கரிகாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசனைகளை பெற்றனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ்.பிரியதர்ஷினி சரவணன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்கண்ணன், இ.தேவி, என்.வேலு, எம்.ராணி, பி.சுரேஷ், எம்.கமுருண்நிஷா, சி.லட்சுமணன், கே.வளர்மதி, வி.வசந்தி, ஜெ.சிவகாமி, கே.ராஜேஷ், டி.ஆர்.வாணி, கே.ராஜவேலு, ஏ.பிஸ்மில்லா, ஊராட்சி செயலாளர் கே.ஆர். சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.