அக்டோபர் 15, 2020 இளைஞர்களின் எழுச்சி நாயகன் இந்திய ஏவுகணை நாயகன் மக்கள் ஜனாதிபதி என்றெல்லாம் பெயர் பெற்று நம்மிடையே வாழ்ந்த ஐயா மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கும்முடிபூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அறுபத்தி ஒரு பஞ்சாயத்துக்களில் பனை விதை நடவு துவக்கவிழா இனிதே நடந்தேறியது.
பனை நம் தமிழ் சமூகத்தின் சொந்தமாகவும் நம்முடைய தமிழ் மொழியின் சொத்துமாயும் இருக்கின்ற ஒரே மரம். முப்பது கோடி முகமுடையாள் என்று இந்த பாரதத்தை பார்த்து முண்டாசுகவி பாடிய பொழுது 30 கோடிக்கும் மேலாக பனை மரங்கள் இருந்ததாக வரலாறுகள் நமக்கு சொல்கிறது. இன்றைக்கு 30 நூறாகி 110 120 130 க்கு அருகில் சென்று விட்டோம். ஆனால், பனையின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 3000 கோடி மட்டுமே ஆகவே பனையினை வளர்த்தெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் அனைவருமே இருக்கின்றோம்.
இந்தப் பேரழிவின் விளிம்பில் உள்ள பனை மரத்தை காப்பது நம் கடமை என்கின்ற பொறுப்புணர்வை ஏற்று நமது எலைட் பள்ளிக் குழுமம் உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளையோடு இணைந்து இன்றைக்கு கும்முடிபூண்டி ஒன்றியத்தின் 61 பஞ்சாயத்துகளிலும் பனை விதை நடவுத் துவக்க விழாவினை முன்னெடுத்தது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பனை விதை நடவு துவக்க விழாவிற்கு கும்முடிபூண்டி ஒன்றிய பெருந்தலைவர் திரு. K.M.S.சிவகுமார் M.Com மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய துணை பெருந் தலைவர் திருமதி மாலதி குணசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வாசுதேவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு பார்த்தசாரதி, மெலக்கழனி ஊராட்சி தலைவர் திருமதி பத்மஜா கௌரிசங்கர் மற்றும் பெரிய ஏரி சங்கத்தலைவர் திரு. தேவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை திருவாளர் கௌரிசங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கினார். அதனை தொடர்ந்து வந்திருந்த அனைத்து பெரியோர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. பனையின் அவசியத்தையும் பனையின் முக்கியத்துவத்தையும் இந்த மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஒன்றிய பெருந்தலைவரும் அவரை தொடர்ந்து திமு கழக பொதுக்குழு உறுப்பினரான திரு குணசேகர் அவர்கள் பேரிடர் காலத்தில் பெரும் பணியாற்றுகின்ற மரம் பனை மரம் என்றும் விளக்கி கூறினார்கள். இந்நிகழ்வில் எலைட் பள்ளி குழும முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பால் செபாஸ்டின் அவர்கள் விளக்கினார். வந்திருந்த அனைவருக்கும் காந்தி உலக மைய நிறுவனர் திருவாளர் ராஜேஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
ஆசிரிய பெருமக்களும் மேலக்கழனி ஊராட்சிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.